தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

தாய்நிலம் எங்கள் கிராமம்

கோண்டாவில் வடக்கு மற்றும் கிழக்கு, உரும்பிராய் மேற்கு

நூற்றண்டு பழமைவாய்ந்த கோண்டாவில் வடக்கு பணத்தனோடை ஸ்ரீ யானை வயிரவசுவாமி திருக்கோவில் வரலாறு

  1. Home
  2. தாய்நிலம் கல்விக்கூடம்
  3. இன்று 25.12.25 தாய்நிலம் எங்கள் கிராமக்கல்விக்கூடத்தில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஒளிவிழா நிகழ்வு

நூற்றண்டு பழமைவாய்ந்த கோண்டாவில் வடக்கு பணத்தனோடை ஸ்ரீ யானை வயிரவசுவாமி திருக்கோவில் வரலாறு

நூற்றண்டு பழமைவாய்ந்த கோண்டாவில் வடக்கு பணத்தனோடை ஸ்ரீ யானை வயிரவசுவாமி திருக்கோவில் வரலாறு
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்”
❖ தலப் பெருமையும் அமைவிடமும் ❖
திருமூலர் “சிவபூமி” என்று போற்றிய மணிநாடாம் ஈழத்திருநாட்டில், யாழ்ப்பாண மாவட்டத்தில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் நல்லூர் பிரதேசத்தில், கோண்டாவில் வடக்கு கிராமத்தில் “பணத்தனோடை” என்னும் புனித பூமியில் ஸ்ரீ யானை வயிரவசுவாமி எழுந்தருளியுள்ளார். தன்னை நாடி வரும் அடியவர்களுக்கு அருளையும் பாதுகாப்பையும் வாரி வழங்கும் கண்கண்ட தெய்வமாக வீற்றிருக்கும் இவ்வாலயம், வெறும் வழிபாட்டுத் தலம் என்பதற்கும் அப்பால், ஒரு சமூகத்தின் ஆன்மீக உரிமைக்கான அடையாளமாகவும், மூதாதையர்களின் தியாகத்தின் சின்னமாகவும் என்றென்றும் திகழ்கின்றது.
❖ தோற்றமும் வரலாற்றுப் பின்னணியும் ❖
(19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி) இவ்வாலயத்தின் தோற்றம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், சுமார் 1885 முதல் 1900 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்தது. அக்காலத்தில் இப்பிரதேச மக்கள் கோண்டாவில் வடக்கில் அமைந்திருந்த “சித்தி வயிரவர்” ஆலயத்தையே வழிபட்டு வந்தனர். வயிரவரும் அம்மாளும் இணைந்த வடிவில் அமைந்திருந்த அந்த ஆலயத்தில் எமது மூதாதையர்களும் பொங்கல் பொங்கி வழிபட்டு வந்தனர். எனினும், அக்காலத்தில் சமூகத்தில் நிலவிய சாதியக் கட்டுப்பாடுகளும் அடக்குமுறைகளும் காரணமாக, எமது மூதாதையர்களுக்கு அந்த ஆலயத்தினுள் சென்று பொங்கல் பொங்கி வழிபடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டது.
“இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம்” என்ற உண்மையை உணர்ந்த எமது முன்னோர்கள், அந்தத் தடையை மனவுறுதியுடன் கடந்து, சித்தி வயிரவர் ஆலயத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், “பணத்தனோடை” காணியில் நிழல் பரப்பி நின்ற கொன்றை மரத்தின் கீழ் ஒரு வயிரவர் சூலத்தை நிறுவி வழிபடத் தொடங்கினர். எளிமையான முறையில் பொங்கல் பொங்கி ஆரம்பிக்கப்பட்ட அந்த வழிபாடே, காலந்தோறும் செழித்து, இன்று ஆலமரமாக வளர்ந்து ஸ்ரீ யானை வயிரவசுவாமி திருக்கோவிலாக மிளிர்கின்றது.
❖ ஸ்தாபகர்களும் வம்சப் பரம்பரையும் ❖
இவ்வாலயத்தை உருவாக்கிய பெருமை வினாசி என்னும் குடும்பத் தலைவரின் வழித்தோன்றல்களையே சாரும். வினாசி அவர்களின் மகனான சின்னப்பெடியன், அவரது தர்மபத்தினியார் கறுப்பி மற்றும் இவர்களின் மருமகனான கந்தன் (வேலன் என்பவரின் மகனும், சின்னப்பெடியனின் மகள் செல்லியின் கணவரும்) ஆகியோர் இணைந்து இத்திருக்கோவிலை ஸ்தாபித்தனர். சின்னப்பெடியன் — கறுப்பி தம்பதியருக்குப் பிறந்த சின்னப்பு, செல்லி, வைரவன், சீதேவி ஆகிய நான்கு பிள்ளைகளின் வழித்தோன்றல்கள் மூலமாக ஆலய நிர்வாகம் பரம்பரை பரம்பரையாகப் பேணப்பட்டு வந்தது. இக்குடும்பங்களுக்குள்ளே நடைபெற்ற திருமண உறவுகள் இந்த நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தின. சின்னப்பெடியனுக்குப் பின், அவரது மகனான வைரவன் (வைரவி) ஆலயத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று, ஆலயத்தை சிறந்த முறையில் நிர்வகித்து வந்தார்.
❖ வண்டில் மாட்டுத் திருவிழாவும் சமூகப் பண்பாடும் ❖
இவ்வாலயத்தின் வரலாற்றில் “வண்டில் மாட்டுத் திருவிழா” ஒரு தனிச் சிறப்பான இடம் பெற்றுவந்தது. ஆலயத்தின் தலைவராக விளங்கிய வைரவன் அவர்கள் (அண்ணளவாக 1890 இல் பிறந்தவர்) ஒரு சிறந்த வண்டில் மாட்டுச் சவாரிகாரராகத் திகழ்ந்தார். இதனால், ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் திருவிழாவின்போது, அயல் கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் மாட்டு வண்டில்களில் வந்து கூடுவர். அந்தத் திருவிழா அக்காலத்தில் ஒரு மாபெரும் சமூக ஒன்றுகூடலாகவும், பக்திப் பெருவிழாவாகவும் சிறப்புற நடைபெற்றது.
❖ சட்டரீதியான அங்கீகாரமும் நன்கொடை உறுதியும் ❖ (1934)
வாய்மொழி வரலாறாக இருந்த இவ்வாலயத்தின் உரிமை, சட்டரீதியான ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டமை இதன் வரலாற்றுச் சிறப்பம்சமாகும். ஆலயம் அமைந்துள்ள “பணத்தனோடை” பர.நில.இலா 1, 3/4 என்னும் நிலமும், அதனோடு சார்ந்த சொத்துக்களும் 1934 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 26 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணச் சட்டத்தரணி டாக்டர் சி. கந்தையா அவர்கள் முன்னிலையில் இலக்கம் 3949 கொண்ட நன்கொடை உறுதியின் மூலம் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டன. இதன்போது சின்னப்பெடியன் அவர்களின் மகன் வைரவன் (வைரவி) ஆலயத்தின் தர்மகர்த்தாவாக, பராமரிப்புப் பொறுப்பை ஏற்றிருந்தார்.
❖ தருமசாதனமும் பொது அர்ப்பணிப்பும் ❖(1977)
ஊர் பொதுமக்களின் தொடர்ச்சியான வேண்டுகோளுக்கு இணங்கவும், ஆலயத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டும், 1977 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் 26 ஆம் திகதி (26.09.1977) அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தருமசாதனம் (இலக்கம் 5243) எழுதப்பட்டது. சட்டத்தரணி சி. சிதம்பரநாதன் அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட இவ்வுறுதியை மனமுவந்து ஊர் மக்களுக்காக எழுதிக் கொடுத்த மூதாதையர் வழிவந்தோர்களான,
1) சின்னப்பெடியன் வைரவன் (வைரவி) — ஆலய தர்மகர்த்தா
2) வைரவன் நவரத்தினம் மற்றும் மனைவி நவரத்தினம் சின்னத்தங்கச்சி
3) சின்னப்பு வெள்ளையன் மற்றும் மனைவி வெள்ளையன் கனகம்மாள்
4) சின்னப்பு மாரிமுத்து மற்றும் மனைவி மாரிமுத்து இலட்சுமி
ஆகியோரால் ஆலயத்தையும், அதற்குரிய ஒன்றேமுக்கால் பரப்பு விஸ்தீரணம் கொண்ட காணியையும் ஊர் பொதுமக்களின் நிர்வாகத்திற்கு மனமகிழ்வுடன் ஒப்படைத்தனர். இதன் மூலம் “கோண்டாவில் வடக்கு யானை வயிரவசுவாமி கோவில்” அதிகாரபூர்வமாக ஊர் பொதுமக்களுக்குச் சொந்தமான பொது நம்பிக்கைப் பொறுப்பாக (Public Trust) அர்ப்பணிக்கப்பட்டது.
❖ முதல் நிர்வாக சபை ❖ (1977)
தருமசாதனம் எழுதப்பட்டதைத் தொடர்ந்து, ஆலயத்தைப் பரிபாலிக்க ஊர் மக்களால் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது நிர்வாக சபை 1977 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டது:
தலைவர் – கந்தன் ஐயாத்துரை
உப தலைவர் – ஐயாகுட்டி தம்பிப்பிள்ளை
செயலாளர் – மாரிமுத்து சீவரத்தினம்
உப செயலாளர் – கதிரவேலு இலக்கணகுமார்
பொருளாளர் – ஐயாத்துரை நற்குணராசா
உப பொருளாளர் – கைலாயப்பிள்ளை தர்மகுலசிங்கம்
❖ தில்லையம்பதி சிவகாமி அம்பாளுடனான ஆன்மீகப் பிணைப்பு ❖
யானை வயிரவர் ஆலயமும், அண்டையில் அமைந்த தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோவிலும் (முன்னைய பேச்சி அம்மன் கோவில்) சமகாலத்தில் தோன்றியவையாகும்.
1910 ஆம் ஆண்டு சிவகாமி அம்பாள் ஆலயத்திற்கு குதிரை வாகனம் செய்யப்பட்டது. அன்று முதல், விஜயதசமித் திருநாளன்று அம்பாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, பாரிவேட்டை (வாழை வெட்டுதல்) நிகழ்விற்காக யானை வயிரவர் ஆலயத்திற்கு வருகை தரும் மரபு சம்பிரதாயமாகப் பேணப்பட்டு வருகிறது. சிவகாமி அம்மன் ஆலய வரலாற்றிலும் “குதிரை வாகனத்தில் அம்பாள் யானை வயிரவர் சுவாமி கோவிலுக்குச் சென்று வேட்டையாடுவது” என்று குறிப்பிடப்பட்டுள்ளமை இரு ஆலயங்களுக்குமிடையிலான தொன்மையான பிணைப்பை உறுதி செய்கிறது.
இன்றும் அந்தப் பண்டைய மரபின் தொடர்ச்சியாக, தில்லையம்பதி சிவகாமி அம்மன் தனது மஹோற்சவ பெருவிழாவின் வேட்டைத் திருவிழாவின்போது யானை வயிரவர் ஆலயத்திற்கு எழுந்தருளி, ஆலய முன்றலில் வேட்டையாடி, வயிரவர் ஆலயத்தினுள் சென்று இளைப்பாறிச் செல்கின்ற மரபுசார் திருவிழா இன்றும் சிறப்புற கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, யானை வயிரவசுவாமியும் தனது அலங்கார உற்சவத்தின் இறுதி திருவிழாவான ஆனி உத்தர நன்னாளில் அடியவர்களுக்கு அருள்பாலிக்க தெரு வீதி வலம் வருவது வழமை. அந்நேரத்தில் தில்லையம்பதி சிவகாமி அம்மன் ஆலயத்திற்கும் சென்று யானை வயிரவர் இளைப்பாறி வருவது மரபுசார் திருவிழாவாக இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாறு இரு ஆலயங்களும் தங்களுக்கிடையே நூற்றாண்டுகளாக ஆன்மீக அன்பு பரிமாற்றத்துடன் இணைந்து விளங்குகின்றன.
❖ முடிவுரை ❖
அன்று கொன்றை மரத்தின் கீழ் ஒரு சூல வடிவில் தோற்றம் பெற்ற யானை வயிரவப் பெருமான், இன்று கோண்டாவில் வடக்கு மக்களின் காவல் தெய்வமாக கம்பீரமாக அருள்பாலித்து வருகிறார். மூதாதையர்களின் வைராக்கியமும், தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்ட பக்தியும், பொதுநல நோக்கும் சாட்சியாக இவ்வாலயம் இன்றும் நிலைத்து நிற்கிறது.
சட்டத்தரணி சி. கந்தையா அவர்களின் முன்னிலையில் 1934 இல் பதிவு பெற்ற நன்கொடை உறுதியும், 1977 இல் சட்டத்தரணி சி. சிதம்பரநாதன் அவர்களால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட தருமசாதனமும் இவ்வாலயத்தின் தொன்மைக்கும் தொடர்ச்சிக்கும் என்றும் அழியாச் சான்றுகளாக விளங்குகின்றன.
“மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்”
— ஸ்ரீ யானை வயிரவசுவாமி திருவருளால் யாவரும் வாழ்க —
தொகுப்பு அருமைத்துரை யசீகரன்
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments